மதுரை அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்கள் நேரடி அனுபவம் பெறலாம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை.

Published Date: December 19, 2024

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் அமையும் அறிவியல் மையத்தில் பள்ளிமாணவர்கள் நேரடி அறிவியல் அனுபவம் பெறலாம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி கரிமேடு பகுதியில் அங்கூரான் அறிவியல் மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.50 கோடியில் இந்த மையம் அமைகிறது. இதற்கான நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், பின்னாக்கிள் இன்போடெக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அங்கூரான் பவுண்டேஷன் பிமல் பட்வாரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஊக்குமளிக்கும் வகையில் இந்த அறிவியல் மையம் மதுரை கரிமேடு பகுதியில் அமைய உள்ளது. செயல் முறையில் அறிவியலை கற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த மையம் உருவாக்கியதில் மகிழ்ச்சி. இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ள பினாக்கிள்  நிறுவனம் வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 1300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அதன் சேவை இதிலும் தொடர்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது சிறந்த பணி. பல முன்னணி நிறுவனங்களில் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் முதல்வரின் வழிகாட்டுதலில் கல்வியும், சுகாதாரமும் ஆட்சியின் இரு கண்கள் என்னும் அடிப்படையில் இந்த திட்டம் செயல் வடிவம் பெறுகிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவியல் மையத்தை உருவாக்குகிறோம். இதில் ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நேரடி அறிவியல் அனுபவம் பெற முடியும். மதுரை மாநகராட்சியில் பல்வேறு திட்ட பணிகளை சிறப்பாக செய்கிறோம். இந்த அறிவியல் மையம் உருவாக்க காரணமாக இருந்த மாநகராட்சி ஆணையரை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Media: Hindu Tamil